மிதிலைக் காட்சிப் படலம் - 624
சூரியன் அத்தமித்தல்
கதிரவன் மறைதலும் அந்திமாலையின் தோற்றமும்
624.
அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ.
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என.
நல் நெடுங் கரங்களை நடுக்கி. ஓடிப்போய்-
முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான்.
அன்ன மென்- அன்னம் போன்ற மெல்லிய; நடையவட்கு -
நடையை உடைய சீதைக்கு; அமைந்த - (உடம்பு முழுதும்)
பொருந்தின்; காமத்தீ - காமமாகிய நெருப்பு்; தன்னையும் சுடுவது
- (மேலே எழுந்து இயல்பாக வெப்பம் கொண்ட) தன்னையும்
எரிப்பதை; தரிக்கிலான் என - பொறுக்கமாட்டாதவன்போல்;
முன்னை வெம் கதிரவன் - பழைமையான வெப்பக்
கதிர்களையுடைய சூரியன்; நல் நெடு கரங்களை - தன்னுடைய
நீண்ட கைகளை; நடுக்கி - நடுங்கச் செய்து; ஓடிப்போய் -
விரைந்து சென்று; கடலில் மூழ்கினான் - (மேற்குக்) கடலிலே
மூழ்கினான்.
சீதையின் காமத் தீ இயற்கை வெப்பமுள்ள கதிரவனையும் சுடும்
வல்லமை பெற்றதாயிற்று. வெப்பம் முதலானவற்றால்
துன்பப்படுகின்றவர்க்கு கைகள் நடுங்குதல் இயல்பு. 61
