மிதிலைக் காட்சிப் படலம் - 627
பிராட்டி வருந்திக் கூறல்
மாலை வருகையும் சீதையின் புலம்பலும்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
627.
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து.
கடி நாள்மலரின் விடம் பூசி.
இயங்கு தென்றல் மன்மதவேள்
எய்த புண்ணினிடை நுழைய.
உயங்கும் உணர்வும். நல் நலமும்.
உருகிச் சோர்வாள் உயிர் உண்ண
வயங்கு மாலை வான் நோக்கி.
‘இதுவோ கூற்றின் வடிவு?’ என்றாள்.
கயங்கள் என்னும் - பொய்கைகள் என்கிற; கனல் தோய்ந்து -
நெருப்பிலே படிந்து (உடம்பு காய்ந்து); கடி நாள் மலரின் -
மணமுள்ள புதிய பூக்களிலிருந்து; விடம் பூசி - (மகரந்த
மாகிய) நஞ்சை எடுத்து மேலே பூசிக்கொண்டு்; இயங்குதென்றல் -
உலாவும் தென்றல் காற்று (ஆகிய கூர்வேல்); மன்மதவேள் எய்த -
மன்மதன் (தன் அம்புகளை) எய்ததால் உண்டான; புண்ணின் இடை
நுழைய - புண்களின் துளைகளிலே மேலும் (தைத்து) உள் செல்ல;
உயங்கும் உணர்வும் - (அதனால்) குலையும் அறிவும்; நல் நலனும்
- பெண்மைக் குணங்களும்; உருகிச் சோர்வாள் - அழிந்து
தளர்பவளாகிய சீதை; உயிர் உண்ண - (தனது) உயிரைக் கவரும்
பொருட்டு்; வயங்கும் - வந்து தோற்றமளிக்கும்; மாலை வான்
- மாலைப் பொழுதோடு கூடிய வானத்தை; நோக்கி - பார்த்து;
கூற்றின் வடிவு - இயமனது அஞ்சத்தக்க வடிவம்; இதுவோ
என்றாள் இதுதானோ என்று எண்ணி அஞ்சினாள்.
மலரின் மகரந்தம் விடமாகும்; தென்றல் வேற்படையாகும்.
தென்றலாகிய வேல் காமபாணம் தைத்த புண்ணில் நுழைந்தது.
மாலையும் தென்றலும் பிறர்க்கு இன்பத்தைச் செய்வன. ஆயினும் தம்
விருப்பத்திற்கு உகந்தவரைச் சேராத தலைவர் தலைவியர்க்குக்
காமத்தை வளர்ந்து வருத்தும். 64
