மிதிலைக் காட்சிப் படலம் - 628
அந்திமாலை வந்தமை
628.
‘கடலோ? மழையோ? முழு நீலக்
கல்லோ? காயா நறும் போதோ?
படர் பூங் குவளை நாள்மலரோ?
நீலோற்பலமோ? பானலோ?-
இடர்சேர் மடவார் உயிர் உண்பது
யாதோ?’ என்று தளர்வாள்முன்.
மடல் சேர் தாரான் நிறம் போலும்
அந்தி மாலை வந்ததுவே!
கடலோ - கருங்கடலோ?; மழையோ - காள மேகமோ?
முழு நீலக்கல்லோ - பெரிய இந்திர நீலத்தின் மலையோ?; காயா
நறும்போதோ -காயாச் செடியின் மணமுள்ளபூவோ; படர் பூங்குவளை
நறுமலரோ - படரும் அழகுள்ள கருங்குவளையின் நறுமணப்பூவோ?;
நீலோற்பலமோ - நீலோற்பல மலரோ; பானலோ - கருநெய்தல்
மலரோ?; இடர்சேர் மடவார் - பலவகைத் துன்பங்களும் வந்து
அடைவதற்கு இடமான இளம்பெண்களின்; உயிர் உண்பது யாதோ
- உயிரைக் கவர்வது (மேற்கூறியவற்றுள்) எதுவோ?; என்று - என்று
நினைந்து; தளர்வாள்முன் - (மனமும் உடம்பும்) தளர்பவளாகிய அச்
சீதையின் எதிரிலே; அடல்சேர் அசுரர் - வலிமை மிக்க அசுரரின்;
நிறம் போலும் அந்திமாலை - நிறத்தைப் போன்ற மாலைப்
பொழுதும்; வந்தது - வந்து சேர்ந்தது.
கடல் முதலான ஏழும் இராமனது திருமேனி நிறத்துக்கு
உவமையாகும். 65
