வரைக்காட்சிப் படலம் - 904

bookmark

மலை யூதத் தலைவனை ஒத்தல்

904.

அலகு இல் ஆனைகள் அநேகமும்.
   அவற்றொடு மிடைந்த
திலக வாள் நுதல் பிடிகளும்.
   குருளையும். செறிந்த
உலவை நீள் வனத்து. ஊதமே
   ஒத்த; அவ் ஊதத்
தலைவனே ஒத்துப் பொலிந்தது.
   சந்திரசயிலம்.
 
அலகு  இல் யானைகள்- (உருவம் வலிமைகளை) அளவிடமுடியாத
ஆண்  யானைகள்;  அநேகமும் -  பலவும்; அவற்றொடு மிடைந்த -
அவ்  யானைகளோடு  நெருங்கியுள்ள; திலகம் வாள் நுதல் - சிந்துரத்
திலகம்   தீட்டிய    ஒளியுள்ள   நெற்றியையுடைய;   பிடிகளும்   -
பெண்யானைகளும்;  குருளையும்  -  யானைக் குட்டிகளும்; செறிந்த-
நெருங்கியிருந்தவை;  உலவை  நீள்  வனத்து - மரங்கள் மிகுந்துள்ள
நீண்ட   வனத்திலே;  ஊதமே  ஒத்த  -  வாழும்  காட்டு  யானைக்
கூட்டத்தை   ஒத்திருந்தன;   சந்திர   சயிலம்   -  அந்தச்  சந்திர
சயிலமானது;   அவ் ஊதத் தலைவனே - அந்த யானைக் கூட்டத்தின்
தலைவனை; ஒத்துப் பொலிந்தது - ஒத்து விளங்கியது. 

சேனையிலுள்ள     யானைகள்  சந்திரசயிலத்து  அருகில்  இருந்த
தோற்றம்.  காட்டு யானைக்  கூட்டமும்.  யானைக் கூட்டத் தலைவனும்
போன்று   இருந்தது   என்றார்.  யானைகள்  யாவும் பெரிய மலையை
அடுத்த சிறுசிறு குன்றும் போலிருந்தன என்பது.                  7