வரைக்காட்சிப் படலம் - 913

bookmark

தூசியைத் துடைத்தல்

913.

மிதிக்க நிமிர் தூளியின்
   விளக்கம் அறு மெய்யை.
சுதைக் கண் நுரையைப் பொருவு
   தூசு கொடு. தூய்தா
உதித்தனர். இளங் குமரர்;
   ஓவியரின் ஓவம்
புதுக்கினர் என. தருண
   மங்கையர் பொலிந்தார்.
 
மிதிக்க நிமிர் - யானை முதலானவை மிதித்துச் செல்வதால் மேலே
எழுந்த;  தூளியின்  -  புழுதியால்;  விளக்கம்  அறு  மெய்யை  -
ஒளியில்லாது  அழகு  மழுங்கிய மனைவியரின் மேனியை; இளங்குமரர்
-  அம்  மங்கையரின்  இளமையான   கணவர்;  சுதைக்  கண் நுரை
பொருவு  -  பாலின்  நுரையை  ஒத்த; தூசு  கொடு  - ஆடையைக்
கொண்டு;  தூய்தா  - (படிந்த தூசு  நீங்கும்படி) தூயதாகப் (புழுதியை);
உதிர்த்தனர்  -  போக்கினார்கள்; (அதனால்)  தருண  மங்கையர் -
இளமையுடைய  அம்  மங்கையர்;   ஓவியர்  இன்  ஓவம்  - ஓவியர்
அழகிய   ஓவியத்தை  (மாசுநீங்க);  புதுக்கினர்  என  - புதுப்பித்தார்
என்னும்படி; பொலிந்தார் - விளங்கினார்கள். 

கணவர்     தம்  மனைவியர்  மீது  படிந்திருந்த புழுதியைத் தனது
ஆடையால்   போக்க.   அதனால்    அம்    மகளிர்   ஓவியர்களால்
புதுப்பிக்கப்பட்ட ஓவியம் போல விளங்கினர் என்பது.              16