வரைக்காட்சிப் படலம் - 915
படமாடத்தில் மங்கையர் முகங்களின் காட்சி
915.
தூசினொடு வெண் படமுடைக் குடில்கள்தோறும்.
வாச நகை மங்கையர் முகம் பொலிவ. வானில்.
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும்.
வீசு திரை வெண் புனல். விளங்கியன போலும்.
வெண் தூசினொடு - வெண்மையான ஆடைகளால் ஆகிய; படம்
உடை - விருதுக் கொடிகளையுடைய; குடில்கள்தோறும் -
கூடாரங்களில் எல்லாம்; நகை வாச மங்கையர் - புன்சிரிப்பும்
இயற்கை மணமும் உள்ள மகளிரின்; முகங்கள் - முகங்கள்; மழை
வானில் - மேகம் சஞ்சரிக்கும் வானத்திலேயுள்ள; மாசு இல் மதியின்
- குற்றமில்லாத சந்திரனின்; கதிர் வழங்கும் நிழல் - ஒளி வீசும்
பிரதிபிம்பங்களை; எங்கும் - எல்லா இடங்களிலும்; வீசு திரை
வெண்புனல் - கடலின் அலை வீசும் வெண்மையான நீரில்;
விளங்கியன - விளக்க முற்றிருப்பதை; போலும் - ஒத்திருக்கும்.
வெண்ணிறக் கூடாரங்களினுள்ளே மகளிர் முகங்கள் தோன்றுவது.
கடலின் வெண்மையான நீரில் ஒளிவீசும் சந்திர பிம்பங்கள்
அமைந்திருப்பது போலும் என்றார் - தற்குறிப்பேற்றவணி. 18
