வரைக்காட்சிப் படலம் - 917
புழுதியை உதறிவிட்ட குதிரைகள்
குதிரைகள் அடங்கி வருதல்
917.
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்.
ஆயவரை. அந் நிலை அறிந்தனர். துறந்தாங்கு.
ஏய அரு நுண் பொடி படிந்து. உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன. பரந்தே.
தீயரொடு ஒன்றிய - தீய குணத்தவரோடு (ஆராயாமல்) நட்புக்
கொண்ட; அருதிறந்து நல்லோர் - அரிய திறமையுடைய நல்லவர்கள்;
ஆயவரை - அந்தத் தீயவரை; அந்நிலை - அந்த அளவிலே;
அறிந்தனர் - அவர் தீயவர் என்று அறிந்தவர்களாகி; துறந்தாங்கு -
(அவர்களைக்) கைவிட்டாற்போல; ஒள்பாய்பரி - பாய்ந்தோடும்
நல்லிலக்கணம் பொருந்திய குதிரைகள்; ஏய அரு - தம் உடலில்
பொருந்த; நுண்பொடி படிந்து - மண்ணிலே படிந்ததால் மிக
நுண்ணிய புழுதியை; உடன் எழுந்து - உடனே எழுந்து; விரைந்து
உதறி - விரைவாக உதறிவிட்டு; பரந்து நின்றன - பரவி நின்றன.
வழியில் வந்த இளைப்பைப் போக்க வேண்டிக் குதிரைகள் புழுதி
படிந்த மண்ணில் புரளுதலும். இளைப்பு நீங்கியதும் அவை தம் மேல்
படிந்த புழுதியை உதறி எழுதலும் இயல்பு. இதற்கு நற்குணமுள்ளவர்
முதலில் தீயவரோடு நட்புக் கொண்டு பின்பு அவரோடு பழகி
அவர்களின் தீக் குணத்தை உணர்ந்து அவர்களுடைய நட்பை அறவே
துறத்தல் உவமையாகும். 20
