வரைக்காட்சிப் படலம் - 919
திரைகளினிடையே மகளிர் கண்கள் பிறழ்தல்
கழங்காடும் மங்கையர் கண்கள்
919.
விழுந்த பனி அன்ன. திரை வீசு புரைதோறும்.
கழங்கு பயில் மங்கையர் கருங் கண் மிளிர்கின்ற-
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து.
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழுங் கயல்கள் என்ன.
கழி சிந்திய - கழியிலே போய்விடுமாறு; தரம் பயில் - உயர்ந்து
எழுகின்ற; தழங்கு தரங்கத்து - ஒலிக்கும் அலைகளிலிருந்து; எழுந்து
- மேல் எழுந்து; இடை பிறழ்ந்து ஒளிர் - இடையிடையே பிறழ்ந்து
விளங்குகின்ற; கொடுங் கயல்கள் என்ன - கொழுத்த கயல் மீன்கள்
என்று சொல்லும்படி; விழுந்த பனி அன்ன - (வானத்திலிருந்து)
விழுந்த பனியைப் போன்று; திரை வீசு - தோன்றுகின்ற திரைச்
சீலைகள் (காற்றால்) மோதப்படுகின்ற; புரைதோறும் -
இடங்களிலெல்லாம் (கூடாரங்களில்); கழங்கு பயில் - கழங்கு
ஆடுகின்ற; மங்கையர் கருங்கண் - மகளிரின் கரிய கண்கள்;
மிளிர்கின்ற - பிறழ்ந்து விளங்கின.
காற்றினால் திரைச் சீலைகள் வீசியெறியப்படும்போது அங்குள்ள
பெண்களின் கண்கள் அலை வீசுமபோது அங்கே எழுந்து தோன்றும்
கயல் மீன்களைப் போலப் பிறழ்ந்தன என்பார் - தற்குறிப்பேற்ற
உவமையணி. அலையும் திரைச் சீலைக்கு அலைகளும். அவற்றிடைப்
பிறழும் மகளிர் கண்களுக்கு அலையில் பிறழும் கயல்மீன்களும்
உவமைகளாகும். 22
