வரைக்காட்சிப் படலம் - 922

bookmark

யானைகள் நீரைக் கலக்குதல்

நீரைக் கலக்கும் யானைகள்
 
922.

நெருங்கு அயில் எயிற்றனைய
   செம் மயிரின் நெற்றிப்
பொருங் குலிகம் அப்பியன.
   போர் மணிகள் ஆர்ப்ப.-
பெருங் களிறு - அலைப் புனல்
   கலக்குவன; பெட்கும்
கருங் கடல் கலக்கும் மது
   கயிடவரை ஒத்த.
 
நெருங்கு  எயிறு  அயில் அனைய - நெருங்கிய தந்தங்கள் வேல்
போல்  கூர்மையுடையன;  செம்மயிரின்  நெற்றி  - செம்மயிர் உள்ள
நெற்றியில்;   பொருங்   குவிகம்   -   (தனக்குத்  தானே  நிகரான)
சாதிலிங்கம்;  அப்பியன  -  அப்பியுள்ள;  பெருங்களிறு  -  பெரிய
யானைகள்;  போர் மணிகள் ஆர்ப்ப - (ஒன்றோடு ஒன்று) மாறுபட்டு
மணிகள்   ஒலிக்க;  அலைபுனல்  கலக்குவன  -  அலைகளையுடைய
பொய்கை    நீரைக்    கலக்குபவை;    பெட்கும்   -   (யாவராலும்)
விரும்பப்படும்; கருங்கடல்- கரிய கடலை; கலக்கும் மது கைடவரை -
கலக்கிய மதுகைடப அசுரர்களை; ஒத்த - ஒத்தன. 

பொருங்  குலிகம்   -  பொருதல்  -  பொருந்துதல்.  ‘பொய்பொரு
முடங்குகை’ - (சிலப் 15-50).

முன்பு     உலகை  அழிக்கும்  பிரளயம்  தோன்றியது.  பின்னர்த்
திருமால்     உலகங்களை   முன்போலப்   படைக்க    விரும்பினான்.
நான்முகனைத்  தனது  உந்திக்  கமலத்தில் படைத்து   வேதங்களையும்
அவனிடம்   கொடுத்தான்.  அக்கடவுள்  படைப்புத்  தொழிலை நடத்த
முயற்சி  மேற்கொள்கையில்  முன்னரே  திருமாலினிடத்துத்  தோன்றிய
மது.  கைடபன்  என்னும்  அசுரர்  இருவரும் அங்கே வந்து பிரமனைக்
கண்டு    அவனிடமிருந்து    வேதங்கள்   எல்லாவற்றையும்  பறித்துக்
கொண்டு   அந்தப்   பிரளயக்   கடலின்    வடகிழக்குத்    திசையில்
பாதாளத்தை  அடைந்தார்கள். வருந்திய  பிரமன்  திருமாலை அணுகித்
தன்   குறைகளை   நீக்குமாறு   வேண்டினான்.  அத் திருமால் குதிரை
முகமுள்ள    உருவம்    கொண்டு    உத்கீதம்   என்ற   பண்ணிலே
வேதங்களைப் பாடினான்.  அது  பெருங்கடலெங்கும் முழங்கியது. அந்த
ஓசை  மது   கைடபர்   காதில்  விழுந்தது.  உடனே வேதங்களை ஒரு
பக்கம்   வைத்துவிட்டு    அந்தக்   கீதம்   வந்த  வழியே  அவர்கள்
சென்றார்கள்.   அப்போது    திருமால்   அவ்  வேதங்களை  மீட்டுப்
பிரமனுக்கு  அன்ன  வடிவிலே  உபதேசித்தான். கீதம்  வந்த வழியைப்
பற்றிக்  கொண்டு  வந்த  அந்த  மது. கைடபர்  அங்கே  ஒருவரையும்
காணாமையால்   மீண்டும்   தாம்   வேதங்களை  வைத்த   இடத்தில்
தேடினார்கள்.    அங்கே   அந்த    வேதங்களைக்    காணாமையால்
அவற்றைக்  கவர்ந்து  போனவரை   அக்   கடலைக்  கலக்கித்  தேடி
அங்கே  திருமால்  பள்ளிகொண்டு  யோக  நித்திரையில்  இருப்பதைக்
கண்டு  ‘இவனே  வேதங்களைக்  கவர்ந்தவன்’  என்று  உறுதி  செய்து
அவனைத்   துயில்   எழுப்பினர்.  திருமால்   அவர்களைப்   பார்த்து
‘உமக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள்’  என்று  கூற. அவர்களோ.
செருக்கின்   மிகுதியால்   ‘உனக்கு   வேண்டிய    வரத்தைக்   கேள்
தருகின்றோம்’  என்று சொன்னார்கள். உடனே  திருமால்  அவர்களிடம்
நீங்கள் என்னால் கொல்லப்படவேண்டும்’  என்று  கேட்டான். அவ்வரம்
அந்த  அசுரர்  ‘இறைவனே!  வேறொன்றாலும்  மூடப்படாத  இடத்தில்
எங்களுக்கு  மரணம்  உண்டாகுமாறு  வரம்  அளிக்கவேண்டும்’ என்று
வேண்டினர்.  திருமால்  அவ்வாறே  வரமளித்துத்   தன்  தொடையில்
அவர்களின் தலைகளை வைத்துச் சக்கரப்படையால்  அறுத்தொழித்தான்.
                                                        25.