கொல்லிமலை
 
                                                    பாடல் 606
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய 
தத்த தன்ன தய்ய ...... தனதான 
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர் 
கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி 
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு 
கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர் 
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி 
யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி 
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி 
யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான் 
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள 
முட்ட நன்மை விள்ள ...... வருவோனே 
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி 
முத்தி விண்ண வல்லி ...... மணவாளா 
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி 
பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா 
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள 
பச்சை மஞ்சை வல்ல ...... பெருமாளே. 
பாடல் 607 
ராகம் - பிருந்தாவன சாரங்கா; தாளம் - கண்டசாபு (2 1/2) 
தய்யதன தானந்த தய்யதன தானந்த 
தய்யதன தானந்த ...... தனதான 
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள் 
சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி 
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து 
தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும் 
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் 
பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப் 
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த 
பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே 
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு 
கல்லுருக வேநின்ற ...... குழலூதுங்
கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை 
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா 
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று 
கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே 
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த 
கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே. 
 

 
                                            