திருப்போரூர்
 
                                                    பாடல் 710
தனத்தா தானன தானா தானன 
தனத்தா தானன தானா தானன 
தனத்தா தானன தானா தானன ...... தனதான 
அனுத்தே னேர்மொழி யாலே மாமய 
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி 
லடுத்தே தூதுகள் நூறா றானதும் ...... விடுவார்கள் 
அழைத்தே வீடினி லேதா னேகுவர் 
நகைத்தே மோடிக ளாவார் காதலொ 
டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின் 
குனித்தே பாகிலை யீவார் பாதியில் 
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது 
குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள் 
குறித்தே மாமய லாலே நீள்பொருள் 
பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக 
குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே 
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை 
யெடுத்தே தான்வர வேதான் யாவரும் 
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா 
மலர்த்தே னோடையி லோர்மா வானதை 
பிடித்தே நீள்கர வாதா டாழியை 
மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே 
சினத்தே சூரர்கள் போராய் மாளவு 
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி 
திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே 
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக 
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள 
திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே. 
பாடல் 711 
தனத்தா தான தந்த தனத்தா தான தந்த 
தனத்தா தான தந்த ...... தனதான 
உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள் 
உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம் 
உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட 
லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள் 
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப 
வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி 
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த 
அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே 
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை 
யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே 
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி 
லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா 
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற 
திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே 
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க 
திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 712
தான தானன தானன தான தானன தானன 
தான தானன தானன ...... தனதான 
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில் 
சேய சாயல்க லாமதி ...... முகமானார் 
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை 
சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி 
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர் 
சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே 
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய 
தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே 
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை 
காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே 
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய 
கார ணாகரு ணாகர ...... முருகோனே 
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு 
பூப சேவக மாமயில் ...... மிசையோனே 
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு 
போரி மாநகர் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 713 
ராகம் - பந்து வராளி 
தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2 
தனன தானன தானன தனன தானன தானன 
தனன தானன தானன ...... தனதான 
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ 
திமிர மேயரி சூரிய ...... திரிலோக 
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண 
சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே 
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி 
குணக லாநிதி நாரணி ...... தருகோவே 
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர 
குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம் 
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக 
பசுர பாடன பாளித ...... பகளேச 
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில் 
பரவு பாணித பாவல ...... பரயோக 
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத 
சமய நாயக மாமயில் ...... முதுவீர 
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு 
சமர மாபுரி மேவிய ...... பெருமாளே. 
 

 
                                            