திருவாமாத்தூர்
 
                                                    பாடல் 728
தனதன தான தானன, தனதன தான தானன 
தனதன தான தானன ...... தனதான 
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு 
மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத் 
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை 
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந் 
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு 
துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத் 
தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர் 
துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ 
அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு 
மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே 
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை 
அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே 
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை 
யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர் 
விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில் 
விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே. 
பாடல் 729 
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன 
தந்த தத்தன தானாதன ...... தனதான 
கண்க யற்பிணை மானொடுற வுண்டெ னக்கழை தோளானது 
நன்க மைக்கின மாமமென ...... முகையான 
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற 
விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன் 
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள் 
மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர் 
பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு 
கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் 
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு 
விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி 
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர் 
வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே 
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல 
முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித் 
தண்டரக் கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை 
சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. 
பாடல் 730 
தனதன தானத் தானன, தனதன தானத் தானன 
தனதன தானத் தானன ...... தனதான 
கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு 
கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர் 
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள் 
கனதன பாரக் காரிகள் ...... செயலோடே 
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள் 
பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே 
பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள் 
புரிவது தானெப் போதது ...... புகல்வாயே 
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ 
சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத் 
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல 
தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா 
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை 
அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா 
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய 
அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே. 
பாடல் 731 
தான தனதன தனதன தனதன 
தான தனதன தனதன தனதன 
தான தனதன தனதன தனதன ...... தனதான 
கால முகிலென நினைவுகொ டுருவிலி 
காதி யமர்பொரு கணையென வடுவகிர் 
காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங் 
கான மமர்குழ லரிவையர் சிலுகொடு 
காசி னளவொரு தலையணு மனதினர் 
காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ் 
சால மயல்கொடு புளகித கனதன 
பார முறவண முருகவிழ் மலரணை 
சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச் 
சாதி குலமுறு படியினின் முழுகிய 
தாழ்வ தறஇடை தருவன வெளியுயர் 
தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே 
வேலை தனில்விழி துயில்பவ னரவணை 
வேயி னிசையது நிரைதனி லருள்பவன் 
வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே 
வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது 
வேடை கெடவமு தருளிய பொழுதினில் 
வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப 
வாலி யுடனெழு மரமற நிசிசரன் 
வாகு முடியொரு பதுகர மிருபது 
மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே 
வாச முறுமலர் விசிறிய பரிமள 
மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக 
வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே. 
 

 
                                            