விருத்தாசலம்
 
                                                    பாடல் 750
தனத்தானன தானன தானன 
தனத்தானன தானன தானன 
தனத்தானன தானன தானன ...... தனதான 
குடத்தாமரை யாமென வேயிரு 
தனத்தார்மதி வாணுத லாரிருள் 
குழற்காடின மாமுகில் போல்மது ...... கலைமோதக் 
குலக்கார்மயி லாமென வேகயல் 
விழித்தார்கர மேல்கொடு மாமுலை 
குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை 
படித்தார்மயி லாமென வேநடை 
நெளித்தார்பல காமுகர் வார்கலை 
பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர் 
படிக்கார்மின லாமென வேநகை 
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள் 
பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ 
அடைத்தார்கட லோர்வலி ராவண 
குலத்தோடரி யோர்சர னார்சின 
மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே 
அறுத்தாரய னார்தலை யேபுர 
மெரித்தாரதி லேபுல னாருயி 
ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா 
விடத்தாரசு ரார்பதி வேரற 
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம் 
விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர 
விழித்தாமரை போலழ காகுற 
மகட்கானவ ணாஎன தாயுறை 
விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே. 
பாடல் 751
ராகம் - ஹரிகாம்போதி 
தாளம் - ஆதி ( 2 களை) 
தனதன தனதன தனதன தனதன 
தனதன தனதன ...... தனதான 
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி 
செயமுன மருளிய ...... குளவோனே 
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு 
தெறிபட மறுகிட ...... விடுவோனே 
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி 
னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ 
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் 
ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா 
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் 
கணினெதிர் தருவென ...... முனமானாய் 
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக 
கருணையில் மொழிதரு ...... முதல்வோனே 
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட 
முரணுறு மசுரனை ...... முனிவோனே 
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ் 
முதுகிரி வலம்வரு ...... பெருமாளே. 
பாடல் 752 
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த 
தனதத்த தனதத்த ...... தனதான 
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி 
பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப் 
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க 
பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி 
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு 
மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே 
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை 
விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே 
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி 
னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர் 
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய் 
அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே 
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற 
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே 
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர் 
வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே. 
 

 
                                            